மாயமற்ற அன்பு

தம்பி: என்ன அண்ணே எப்போ வந்தீங்க? நீங்க வந்தத கவனிக்கலண்ணே?


அண்: நீ செல்போன்ல யாருகிட்டயோ ஜாலியா சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டிருந்தியே, அப்போவே வந்துட்டேன். செல்போன்ல யாரு, உன் பிரண்டுதானே?


தம்பி: என் பிரண்டுதான், ஆனா எப்பப்பாத்தாலும் எனக்கு போன் பண்ணி உயிர எடுக்குராண்ணே. அவன் டார்ச்சர் தா…ங்கமுடியல.


அண்: ஆனா… நீ அவங்கிட்ட நல்லா சந்தோஷமாதானே பேசிக்கிட்டு இருந்தே?


தம்பி: அதுவா… வேற என்னண்ணே பண்றது, நமக்கு புடிக்காட்டாலும் சில சமயத்துல நல்லா பேசுற மாதிரி நடிக்கவேண்டியிருக்குல்லண்ணே.


அண்: ஆனா இப்படி உள்ளே ஒண்ணு நினைச்சுக்கிட்டு வெளியே அன்பு காட்டுற மாதிரி நடிக்கிறது தப்பில்லயா தம்பி?


தம்பி: யாரையும் பகைச்சுக்கக்கூடாதுல்லண்ணே? ‘கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்’ன்னு ரோமர் 12: 18௮ல்ல சொல்லியிருக்குல்லண்ணே.


அண்: அது சரிதான், ஆனா அதே ரோமர் 12:9 ல்ல “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக”ன்னும் சொல்லியிருக்குல்லப்பா? அப்போ அன்பு காட்டுற மாதிரி நடிக்கக்கூடாதுன்னுதானே தேவன் சொல்றாரு.


தம்பி: அண்ணே…, என் பிரண்டுட்ட போயி நீ ரொம்ப டார்ச்சர் பண்றன்னுட்டு சொல்ல முடியாதே. அவன் ரொம்ப பீல் பண்ணுவான்லண்ணே.


அண்: ஆனா இப்படி நல்லா பேசுர மாதிரி அக்ட் பண்ணுனீன்னா, தேவன் பீல் பண்ணுவாரே, பரவால்லையா? 1.பேதுரு 1:22 ல்ல “நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகுங்கள்”ன்னும் சொல்லியிருக்குல்லப்பா? அதனால… உன் பிரண்டு எப்படி பேசினாலும், மனசுல ஒண்ணும் தவறா நினைக்காம, முழுமனதோடு அன்பு காட்டணும். வெளில காட்டுற அன்புக்கும், நம்ம உள்ளுக்குள்ள வச்சிருக்கிற அன்புக்கும் ஒரு வித்தியாசம் இருக்கக்கூடாது, அதுதான் மாயமற்ற அன்பு.


தம்பி: ஓ… வெளிப்படையா அன்பாயிருந்தாலே போதும்னு நினைச்சுகிட்டு இருந்தேண்ணே. ஆனா தேவன் நம்முடைய இருதயத்தின் சிந்தனையை அறிந்து நாம மாயமா அன்பு காட்டுறோமா இல்லயான்னு தெரிஞ்சுக்கிறார்னு இப்பதான் புரிஞ்சுது. மொதல்ல என் பிரண்ட கூப்டு அவன தப்பா நெனச்சதுக்கு சாரி கேட்கப்போறேண்ணே.


அண்: சாரி கேட்கப்போறீயா! வெரி குட், வெரி குட். ரொம்ப சந்தோஷம் தம்பி, சரி அப்புறம் சந்திக்கலாம்.


தம்பி: சரி அப்புறம் பார்க்கலாம்ணே.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets